Wednesday, March 3, 2010

ஸ்ரீ மாரியம்மன் தாலாட்டு


ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும் மாரியம்மன் தாலாட்டு

விநாயகர் துதி

காப்பு
கொச்சகக் கலிப்பா

பூதலத்தில் யாவர்க்கும் பேராதரவா யென்னாளும்
மாதரசி யென்று வாழ்த்துகின்ற மாரியம்மன்
சீதரனார் தங்கை சிறப்பான தாலாட்டைக்
காதலுட னோதக் கணபதியுங் காப்பாமே

வெண் செந்துரை

முந்தி முந்தி விநாயகரே முக்கண்ணனார் தன்மகனே
கந்தருக்கு முன்பிறந்த கற்பகமே முன்னடவாய்
வேலவர்க்கு முன்பிறந்த விநாயகரே முன்னடவாய்
வேம்படியிற் பிள்ளையாரே விக்கினரே முன்னடவாய்
பேழை வயிற்றோனே பெருச்சாளி வாகனரே
காரண மால்மருகா கற்பகமே மெய்ப்பொருளே
சீரான நல்மருகா செல்வக்கணபதியே
ஒற்றைக் கொம்போனே உமையாள் திருமகனே
கற்றைச் சடையணிந்த கங்காதரன் மகனே
வித்தைக்கு விநாயகனே வெண்ணையுண்டோன் மருகா
மத்தக்கரி முகவா மாயோன் மருகோனே
ஐந்துகரத்தோனே யானை முகத்தோனே
தந்தமத வாரணனே தற்பரனே முன்னடவாய்
நெஞ்சிற் குடியிருந்து நீயெனக்கு முன்னடவாய்
பஞ்சஞ்சு மெல்லடியாள் பார்வதியாள் புத்திரனே
வேழமுகத்தோனே விநாயகரே முன்னடவாய்
தாழ்விலாச் சங்கரனார் சற்புத்திரா வாருமையா
முன்னடக்கம் பிள்ளையார்க்கு கண்ணடக்கம் பொன்னாலே
கண்ணடக்கம் பொன்னாலே காற்சிலம்பு முத்தாலே
முத்தாலே தண்டை கொஞ்ச முன்னடவாய் பிள்ளையாரே
செல்வக் கணபதியுன் சீர்ப்பாதம் நான் மறவேன்.

சரஸ்வதி துதி

தாயே சரஸ்வதியே சங்கரியே முன்னடவாய்
என்தாயே கலைவாணி யோகவல்லி நாயகியே
வாணி சரஸ்வதியே வாக்கில் குடியிருந்து
என்நாவிற் குடியிருந்து நல்லோசை தாருமம்மா
கமலாசனத்தாளே காரடி பெற்றவளே
என்குரலிற் குடியிருந்து கொஞ்சடி பெற்றவளே
என்நாவு தவறாமல் நல்லோசை தாருமம்மா
மாரியம்மன் தன்கதையை மனமகிழ்ந்து நான் பாட
சரியாக என்நாவில் தங்கிக் குடியிரும்மா
கன்னனூர் மாரிமுத்தே கைதொழுது நான்பாட
பின்னமில்லாமல் பிறகிருந்து காருமம்மா.

மாரியம்மன் துதி

மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
ஆயிவுமை யானவளே ஆதிசிவன் தேவியரே
மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா
மாயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா
ஆயன் சகோதரியே மாரிமுத்தே வாருமம்மா
தாயே துரந்தரியே ஆஸ்தான மாரிமுத்தே
திக்கெல்லாம் போற்றும் எக்கால தேவியரே
எக்கால தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே
காரண சவுந்தரியே நாரணனார் தங்கையம்மா [10]

நாரணனார் தங்கையம்மா நல்லமுத்து மாரியரே
உன் கரகம் பிறந்ததம்மா கன்னனூர் மேடையிலே
உன் வேம்பு பிறந்ததம்மா விஜயநகர் பட்டணமாம்
உன் சூலம் பிறந்ததம்மா துலங்குமணி மண்டபத்தில்
உன் அலகு பிறந்ததம்மா அயோத்திநகர் பட்டணமாம்
உன் பிரம்பு பிறந்ததம்மா பிச்சாண்டி சந்நிதியாம்
உன் உடுக்கை பிறந்ததம்மா உத்திராட்ச பூமியிலே
உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமா மண்டபத்தில்
உன் கருத்து பிறந்ததம்மா கஞ்சகிரி இந்திரபுரம்
உன் அருளர் தழைக்கவம்மா வையங்கள் ஈடேற [20]

உன் குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே மாரிமுத்தே
உனக்கு மூன்று கரகமம்மா முத்தான நற்கரகம்
உனக்கு ஐந்து கரகமம்மா அசைந்தாடும் பொற்கரகம்
உனக்கு ஏழு கரகமம்மா எடுத்தாடும் பொற்கரகம்
உனக்கு பத்து கரகமம்மா பதிந்தாடும் பொற்கரகம்
வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளை யாடிவர
ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா
பதினாயிரங் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா
துலுக்காணத் தெல்லையெல்லாம் குலுக்காடப் பெண்பிறந்தாய்
துலுக்காணத் தெல்லைவிட்டு துரந்தரியே வாருமம்மா [30]

தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா
மலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய்
மலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம்
சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்
இருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம்
சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே
சமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மா
கன்னபுரத்தாளே காரண சவுந்தரியே
கன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும்
கடும்பாடி எல்லையெலாங் காவல்கொண்ட மாரிமுத்தே [40]

ஊத்துக்காட் டமர்ந்தவளே பரசுராமனைப் பெற்றவளே
படவேட்டை விட்டுமெள்ள பத்தினியே வாருமம்மா
பெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரே
பெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மா
ஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை
ஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா
வீராம்பட் டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே
கோலியனூ ரெல்லையிலே குடிகொண்ட மாரியரே
அந்திரத்திற் தேரோட அருகே செடிலசைய
உச்சியிற் தேரோட உயரச் செடிலசைய [50]

மச்சியிற் தேரோட மகரச் செடிலசைய
பக்கங் கயிரோட பகரச் செடிலசைய
ஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரை
தூண்டிலாட் டாட்டிவைக்கத் தோன்றினாய் நீயொருத்தி
சத்தியாய் நீயமர்ந்தாய் தனிக்குட்டி காவுகொண்டாய்
எல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவுகொண்டாய்
உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை
என்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில்
கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக
ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே [60]

எக்காள தேவியரே திக்கெல்லாம் ஆண்டவளே
திக்கெல்லாம் ஆண்டவளே திகம்பரியே வாருமம்மா
முக்கோணச் சக்கரத்தில் முதன்மையாய் நின்றசக்தி
அக்கோணந் தன்னில்வந்து ஆச்சியரே வந்தமரும்
தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா
மாயி மருளியரே மணிமந்திர சேகரியே
வல்லாண்மைக் காரியரே வழக்காடும் மாரிமுத்தே
வல்லவரைக் கொன்றாய் வலியவரை மார்பிளந்தாய்
நீலி கபாலியம்மா நிறைந்த திருச்சூலியரே
நாலுமூலை ஓமகுண்டம் நடுவே கனகசபை [70]

கனகசபை வீற்றிருக்கும் காரண சவுந்தரியே
நாரணனார் தங்கையரே நல்லமுத்து மாரியரே
நடலைச் சுடலையம்மா நடுச்சுடலை தில்லைவனம்
தில்லைவனத் தெல்லைவிட்டு திரும்புமம்மா யிந்தமுகம்
வார்ப்புச் சிலையாளே வச்சிரமணித் தேராளே
தூண்டில் துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்
மண்டையிலே தைத்தமுள்ளு மார்புருகிப் போகுதம்மா
பக்கத்திற் தைத்தமுள்ளு பதைத்துத் துடிக்குதம்மா
தொண்டையிலே தைத்தமுள்ளு தோளுருவிப் போகுதம்மா
கத்திபோல் வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம் [80]

ஈட்டிபோல் வேப்பிலையை யினியனுப்பிக் கொண்டவளே
பத்திரிக் குள்ளிருக்கும் பாவனையை யாரறிவார்
வேப்பிலைக் குள்ளிருக்கும் வித்தைகளை யாரறிவார்
செடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்
தூண்டிமுள்ளைத் தூக்கி துடுக்கடக்கும் மாரிமுத்தே
ஒற்றைச் செடிலாட ஊரனைத்தும் பொங்கலிட
ரெட்டைச் செடிலாட படைமன்னர் கொக்கரிக்க
பரமசிவன் வாசலிலே பாற்பசுவைக் காவுகொண்டாய்
ஏமனிட வசலிலே எருமைக்கிடா காவுகொண்டாய்
எருமைக்கிடா காவுகொண்டாய் எக்கால தேவியரே [90]

எக்கால தேவியரே திக்கெல்லாம் ஆண்டசக்தி
காசிவள நாட்டைவிட்டு கட்டழகி வாருமம்மா
ஊசி வளநாடு உத்தியா குமரிதேசம்
அறியாதான் பாடுகிறேன் அம்மைத் திருக்கதையை
தெரியாதான் பாடுகிறேன் தேவி திருக்கதையை
எட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை
பத்தென்றா லொன்றறியேன் பாலனம்மா உன்னடிமை
பாடவகை யறியேன் பாட்டின் பயனறியேன்
வருத்த வகையறியேன் வர்ணிக்கப் பேரறியேன்
பேரு மறியேனம்மா பெற்றவளே யென்தாயே [100]

குழந்தை வருந்துறதுன் கோவிலுக்குக் கேட்கிலையோ
மைந்தன் வருந்துறதுன் மாளிகைக்குக் கேட்கிலையோ
பாலன் வருந்துறதும் பார்வதியே கேட்கிலையோ
கோயிற் கடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி
சந்நிதி மைந்தனம்மா சங்கரியே பெற்றவளே
வருந்தி யழைக்கின்றேன்நான் வண்ணமுகங் காணாமல்
தேடி யழைக்கின்றேன்நான் தேவிமுகங் காணாமல்
ஏழைக் குழந்தையம்மா எடுத்தோர்க்குப் பாலகண்டி
பாலன் குழந்தையம்மா பார்த்தோர்க்குப் பாலகண்டி
மைந்தன் குழந்தையம்மா மகராசி காருமம்மா [110]

கல்லோடீ உன்மனது கரையிலையோ எள்ளளவும்
இரும்போடீ உன்மனது இரங்கலையோ எள்ளளவும்
கல்லுங் கரைந்திடுமுன் மனங்கரையா தென்னவிதம்
இரும்பு முருகிடுமுன் இருதயமுருகா தென்னவிதம்
முன்செய்த தீவினையோ பெற்றவளே சொல்லுமம்மா
ஏதுமறி யேனம்மா ஈஸ்வரியே சொல்லுமம்மா
கடம்பாடி யெல்லையிலே கட்டழகி வீற்றிருப்பாய்
கடும்பாடி யெல்லைவிட்டு கட்டழகி வாருமம்மா
கரகத் தழகியரே கட்டழகி மாரிமுத்தே
கரகத்து மீதிருந்து கட்டழகி கொஞ்சுமம்மா [120]

கும்பத் தழகியம்மா கோபாலன் தங்கையரே
கும்பத்து மீதிருந்து கொஞ்சுமம்மா பெற்றவளே
கொஞ்சுமம்மா பெற்றவளே குறைகளொன்றும் வாராமல்
உனக்குப் பட்டு பளபளென்ன பாடகக்கால் சேராட
உனக்குமுத்து மொளமொளென்ன மோதிரக்கால் சேராட
உலகமெல்லாம் முத்தெடுக்க உள்ளபடிதான் வந்தாய்
தேசமெல்லாம் முத்தெடுப்பாய் தேவிகன்ன னூராளே
முத்தெடுக்கத் தான்புகுந்தாய் உத்தமியே மாரிமுத்தே
உனக்கு ஈச்சங் குறக்கூடை யிருக்கட்டும் பொன்னாலே
உனக்கு தாழங் குறக்கூடை தனிக்கட்டும் பொன்னாலே [130]

குறக்கூடை முத்தெடுத்து கொம்பனையே நீ புகுந்தாய்
கோயிலின் சந்தடியில் கூப்பிட்டால் கேளாதோ
அரண்மனைச் சந்தடியில் அழைத்தாலும் கேளாதோ
மாளிகையின் சந்தடியில் மாதாவே கேட்கிலையோ
மக்களிட சந்தடியோ மருமக்கள் சந்தடியோ
பிள்ளைகளின் சந்தடியோ பேரன்மார் சந்தடியோ
அனந்தல் பெருமையோ ஆசாரச் சந்தடியோ
சந்தடியை நீக்கியம்மா தாயாரு மிங்கே வா
கொல்லிமலை யாண்டவனைக் குமர குருபரனை
காத்தவ ராயனைத்தான் கட்டழகி தானழையும் [140]

தொட்டியத்துச் சின்னானை துரைமகனைத் தானழையும்
மதுரை வீரப்பனையென் மாதாவே தானழையும்
பாவாடை ராயனைத்தான் பத்தினியே தானழையும்
கருப்பண்ண சுவாமியையுங் கட்டழகி தானழையும்
முத்தாலு ராவுத்தன் முனையுள்ள சேவகரை
மூங்கில் கருப்பனைத்தான் சடுதியிற் றானழையும்
பெரியபாளையத் தமர்ந்த பேச்சியரே மாதாவே
பாளையக் காரியம்மா பழிகாரி மாரிமுத்தே
கன்னனூர் மாரிமுத்தே கலகலென நடனமிடும்
உன்னைப் பணிந்தவர்க்கு உற்றதுணை நீயிரம்மா [150]

ஆதிபர மேஸ்வரியே அருகேதுணை நீயிரம்மா
உன்னைப்போல் தெய்வத்தை உலகத்தில் கண்டதில்லை
என்னைப்போல் மைந்தர் எங்குமுண்டு வையகத்தில்
உன்-மகிமை யறிந்தவர்கள் மண்டலத்தில் யாருமில்லை
உன் -சேதி யறிவாரோ தேசத்து மானிடர்கள்
உன் -மகிமையை யானறிந்து மண்டலத்தில் பாடவந்தேன்
உன் -மகிமையறி யாதுலகில் மாண்டமனு கோடியுண்டு
உன் -சேதியறி யாதுலகில் செத்தமனு கோடியுண்டு
தப்புப்பிழை வந்தாலும் சங்கரியே நீபொறுத்து
ஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்ததெல்லாம் [160]

மனது பொறுத்து மனமகிழ்ச்சி யாகவேணும்
தேவி மனம்பொறுத்து தீர்க்கமுடன் ரட்சியம்மா
கொண்டு மனம்பொறுத்து கொம்பனையே காருமம்மா
கார்க்கக் கடனுனக்குக் காரண சவுந்தரியே
காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்
வேணுமென்று காரடிநீ வேப்பஞ் சிலையாளே
பக்கத் துணையிருந்து பாலகனைக் காருமம்மா
பொரிபோ லெழும்பிநீ பூரித்து ஆலித்து
ஆலித்து நீயெழும்பி ஆத்தா ளிறக்குமம்மா
சிரசினிற் முத்தையம்மா முன்னுதாய் நீயிறக்கும் [170]

கழுத்தினில் முத்தையம்மா கட்டழகி நீயிறக்கும்
தோளினில் முத்தையம்மா துரந்தரியே நீயிறக்கும்
மார்பினில் முத்தையம்மா மாதாவே நீயிறக்கும்
வயிற்றினில் முத்தையம்மா வடிவழகி நீயிறக்கும்
துடையினில் முத்தையம்மா தேவியரே நீயிறக்கும்
முழங்காலில் முத்தையம்மா மீனாட்சி நீயிறக்கும்
கணுக்காலில் முத்தையம்மா காமாட்சி நீயிறக்கும்
பாதத்தில் முத்தையம்மா பாரினி லிறக்கிவிடும்
பூமியில் இறக்கிவிடும் பெற்றவளே காருமம்மா
பெற்றவளே தாயே பேரரசி மாரிமுத்தே [180]

உற்ற துணையிருந்து உகந்தரியே காருமம்மா
உன்னைவிட பூமிதனில் உற்றதுணை வேறுமுண்டோ
பக்கத் துணையிருந்து பாதுகாத்து ரட்சியம்மா
செக்கச் சிவந்தவளே செங்கண்ணன் தங்கையரே
மங்கையெனும் மாதரசி மகராசி காருமம்மா
திங்கள் வதனியரே தேவிகன்ன னூராளே
எங்கள்குல தேவியரே ஈஸ்வரியே கண்பாரும்
மக்கள் விநோதினி மாதாவே கண்பாரும்
ஏழைக் கிரங்காமல் இப்படியே நீயிருந்தால்
வாழ்வதுதான் எக்காலம் வார்ப்புச் சிலையாளே [190]

ஆயி மகமாயி ஆரணங்கு சொற்காரணியே
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே
இரங்கிறங்கும் தாயாரே எங்களைக் காப்பாற்றுமம்மா
மாரித்தாய் வல்லவியே மகராசி காருமம்மா
வீரணன் சோலையிலே ஆரணம தானசக்தி
நீதிமன்னர் வாசலிலே நேராய்க் கொலுவிருந்தாய்
கொலுவிருந்த சக்தியரே கோர்த்தமுத்து நீயிறக்கும்
கோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே
போட்டமுத்து நீயிறக்கும் பொய்யாத வாசகியே
பொய்யாத வாசகியே புண்ணியவதி ஈஸ்வரியே [200]

செடிலோ துடைபெருமன் தூண்டிமுள்ளு கைபெருமன்
அடங்காத மானிடரை ஆட்டிவைக்கும் மாரிமுத்தே
துஷ்டர்கள் தெண்டனிட்டு துடுக்கடக்கும் மாரிமுத்தே
கண்டவர்கள் தெண்டனிட்டு கலக்கமிடும் மாரிமுத்தே
அண்டாத பேர்களைத்தான் ஆணவத்தைத் தானடக்கி
இராஜாக்க ளெல்லோரும் நலமாகத் தான்பணிய
மகுட முடிமன்னர் மனோன்மணியைத் தான்பணிய
கிரீட முடிதரித்த கீர்த்தியுள்ள ராஜாக்கள்
மகுடமுடி மந்திரிகள் மன்னித்துத்தெண்ட னிட்டுநிற்க
பட்டத் துரைகள் படைமுகத்து ராஜாக்கள் [210]

வெட்டிக் கெலித்துவரும் வேதாந்த வேதியர்கள்
துஷ்டர்களைத் தானடக்கும் சூலி கபாலியம்மா
அடங்காத மானிடரை அடிமைபலி கொண்டசக்தி
மிஞ்சிவரும் ராட்சதரை வெட்டிவிரு துண்டகண்ணே
தஞ்சமென்ற மானிடரைத் தற்காக்கும் பராபரியே
அவரவர்கள் தான்பணிய வாக்கினையைப் பெற்றவளே
சிவனுடன் வாதாடும் சித்தாந்த மாரிமுத்தே
அரனுடன் வாதாடும் ஆஸ்தான மாரிமுத்தே
பிரமனுடன் வாதாடும் பெற்றவளே மாரிமுத்தே
விஷ்ணுவுடன் வாதாடும் வேதாந்த மாரிமுத்தே [220]

எமனுடன் வாதாடும் எக்கால தேவியரே
தேவருடன் வாதாடும் தேவிகன்ன னூராளே
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே
காரண சவுந்தரியே கர்த்தனிட தேவியரே
நெருப்பம்மா உன்சொரூபம் நிஷ்டூரக் காரியரே
அனலம்மா உன்சொரூபம் ஆஸ்தான மாரிமுத்தே
தணலம்மா உன்சொரூபம் தரிக்கமுடி போதாது
அண்டா நெருப்பேயம்மா ஆதிபர மேஸ்வரியே
காத்தானைப் பெற்றவளே கட்டழகி மாரிமுத்தே
தொட்டியத்துச் சின்னானைத் தொழுதுவர பண்ணசக்தி [230]

கருப்பனையுங் கூடவேதான் கண்டு பணியவைத்தாய்
பெண்ணரசிக்காகப் பிள்ளையைக் கழுவில் வைத்தாய்
அடங்காத பிள்ளையென ஆண்டவனைக் கழுவில் வைத்தாய்
துஷ்டனென்று சொல்லி துடுக்கடக்கிக் கழுவில் வைத்தாய்
பாரினில் முத்தையம்மா பத்தினியே தாயாரே
வாரி யெடுக்கவொரு வஞ்சியரை யுண்டுபண்ணாய்
முத்தெடுக்குந் தாதி மோகனப் பெண்ணேயென்று
தாதியரைத் தானழைத்துத் தாயாரே முத்தெடுப்பாய்
முத்தெடுத்துத் தான்புகுந்து உத்தமியாள் மாரிமுத்தே
மாயி மகமாயி மணிமந்திர சேகரியே [240]

ஆயி உமையவளே ஆஸ்தான மாரிமுத்தே
பாரமுத்தை நீயிறக்கிப் பாலகனைக் காருமம்மா
காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்
சொற்கேளாப் பிள்ளையென்று தூண்டில் கழுவில் வைத்தாய்
கழுதனக்கு மோர்வார்க்க கட்டழகி யுண்டுபண்ணாய்
நல்லதங்காளை யுண்டுபண்ணாய் நற்கழுவுக்கு மோர்வார்க்க
உரியில் தயிர்வார்க்க உத்தமியே யுண்டுபண்ணாய்
உன் -மருமகளைக் காத்தார்ப்போ லிவ்வடிமையைக் காருமம்மா
எவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப் பாருமம்மா
கடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா [250]

கடைக்கண்ணால் நீபார்த்தால் கடைத்தேறிப் போவேனம்மா
பாரளந்தோன் தங்கையரே பாலகனைக் காருமம்மா
பேரரசி மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா
மகமாயி மாரிமுத்தே மைந்தர்களைக் காருமம்மா
பெற்றவளே மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா
ஆணழகி மாரிமுத்தே அடிமைகளைக் காருமம்மா
பூணாரம் கொண்டவளே பிள்ளைகளைக் காருமம்மா
பாரமெடுக்கவோ அம்மா பாலனா லாகுமோதான்
பூணாரந் தானெடுக்க பிள்ளையா லாகுமோதான்
வருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [260]

பாலன் படுந்துயரம் பாக்கியவதி பார்க்கிலையோ
மைந்தன் படுந்துயரம் மாதாவே பார்க்கிலையோ
குழந்தை படுந்துயரம் கொம்பனையே பார்க்கிலையோ
சிற்றடிகள் படுந்துயரம் தேவியரே பார்க்கிலையோ
பூணார முத்திரையைப் பெற்றவளே தானிறக்கும்
ஆபரண முத்திரையை ஆத்தா ளிறக்குமம்மா
இறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா
அடிமைதனைக் காப்பாற்றி யாணழகி நீயிறக்கும்
குப்பத்து மாரியரே கொலுவிலங் காரியரே
கொலுவிலங் காரியரே கோர்த்தமுத்து நீயிறக்கும் [270]

கோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே
மாரியென்றால் மழைபொழியும்
தேவியென்றால் தேன்சொரியும்
தேவியென்றால் தேன்சொரியும் திரிபுர சுந்தரியே
திரிபுர சுந்தரியே தேசத்து மாரியம்மா
பொன்னுமுத்து மாரியரே பூரண சவுந்தரியே
தாயாரே பெற்றவளே சத்தகன்னி சுந்தரியே
பேரு மறியேனம்மா பெற்றவளே தாயாரே
குருடன்கைக் கோலென்று கொம்பனையே நீயறிவாய்
கோலைப் பிடுங்கிக்கொண்டால் குருடன் பிழைப்பானோ [280]

இப்படிக்கு நீயிருந்தால் இனி பிழையோம் தாயாரே
கலிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுத்தே
யுகம்பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுத்தே
கலியுகத்தில் தாயாரே கண்கண்ட தெய்வம் நீ
உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை
என்னைப்போல் மைந்தர்தான் எங்குமுண்டு வையகத்தில்
அனலை மதியாய் நீ யாவரையும் சட்டை பண்ணாய்
புனலை மதியாய்நீ பூலோகஞ் சட்டைபண்ணாய்
வருந்தி யழைக்கிறேனுன் திருமுகத்தைக் காணாமல்
பாலகனைக் காத்துப் பாதத்தா லுதைத்துவிடு [290]

மைந்தனைக் காத்து மகராசி உதைத்துவிடு
குழந்தையைக் காத்து கொம்பனையே உதைத்துவிடு
ஆதிபரஞ்சோதி அங்குகண்ணே வாருமம்மா
வெள்ளிக்கிழமையிலே கொள்ளிக்கண் மாரியரே
வெள்ளியிலுந் திங்களிலும் வேண்டியபேர் பூஜைசெய்ய
பூஜை முகத்திற்குப் போனேனென்று சொல்லாதே
இந்த மனையிடத்தில் ஈஸ்வரியே வந்தருள்வாய்
வந்தமனை வாழுமம்மா இருந்தமனை ஈடேறும்
இருந்தமனை ஈடேற ஈஸ்வரியே வந்தருள்வாய்
கண்பாரும் கண்பாரும் கனகவல்லித் தாயாரே [300]

நண்பான பிள்ளைகளை நலிந்திடச் செய்யாதே
உன்னை நம்பினோரை ஓய்ந்துவிடச் செய்யாதே
அந்நீதஞ் செய்யாதே ஆயி மகமாயி
வேம்பு ரதமேறி வித்தகியே வாருமம்மா
பச்சிலை ரதமேறி பார்வதியே வாருமம்மா
கொலுவி லிருந்தசத்தி கோர்த்தமுத்து நீயிறக்கும்
போட்டமுத்தை நீயிறக்கும் பூலோகமாரிமுத்தே
கேளிக்கை யாகக் கிளிமொழியே முத்திறக்கும்
அரும்பால கன்றன்னை அவஸ்தைப் படுத்தாதே
வருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [310]

அன்ன மிறங்கவம்மா ஆத்தாளே கண்பாரும்
ஊட்டத்தை நீகொடுத்து உத்தமியே காருமம்மா
இரக்கங் கொடுத்து ஈஸ்வரியே காருமம்மா
காருமம்மா பெற்றவளே காலுதலை நோகாமல்
எங்கேயோ பாராமுகமாய் இருந்தேனென்று சொல்லாதே
அந்திசந்தி பூஜையில் அசதியா யெண்ணாதே
ஒட்டாரம் பண்ணாதே ஓங்காரி மாரிமுத்தே
பாவாடம் நேருமம்மா பழிகள் வந்து சேருமம்மா
பாவாடம் நேர்ந்ததென்றால் பாலருக் கேறாது
கண்டார் நகைப்பார்கள் கலியுகத்தா ரேசுவார்கள் [320]

கலியுகத்தா ரேசுவார்கள் கட்டழகி மாரிமுத்தே
பார்த்தார் நகைப்பார்கள் பரிகாசம் பண்ணுவார்கள்
உதடு படைத்தவர்கள் உதாசீனஞ் சொல்லுவார்கள்
பல்லைப் படைத்தவர்கள் பரிகாசம் பண்ணுவார்கள்
நாவைப் படைத்தவர்கள் நாணயங்கள் பேசுவார்கள்
பார்த்தோர் நகைக்கவம்மா பரிகாசம் பண்ணாதே
கச்சிப் பதியாளே காமாட்சி தாயாரே
தாயாரே பெற்றவளே தயவுவைத்துக் காருமம்மா
மாதாவே பெற்றவளே மனது வைத்துக் காருமம்மா
பார்வதியே பெற்றவளே பட்சம் வைத்துக் காருமம்மா [330]

ஆயிரங் கண்ணுடையாள் அலங்காரி வாருமம்மா
பதினாயிரம் முத்தினிலே பார்த்தெடுத்த ஆணிமுத்து
ஆறாயிரங்கண் முத்துதனி லாத்தாள் வளர்ந்தெழுந்தாள்
நாகத்தின் கண்ணேயம்மா நல்ல விடப்பாம்பே
சேஷத்தின் கண்ணேயம்மா சின்ன விடப்பாம்பே
அஞ்சுதலை நாகமுனைக் கொஞ்சிவிளை யாடுதம்மா
பத்துதலை நாகமம்மா பதிந்துவிளை யாடுதம்மா
செந்தலை நாகமம்மா சேர்ந்துவிளை யாடுதம்மா
கருந்தலை நாகமம்மா காக்குதம்மா உன்கோவில்
சேஷனென்ற பாம்பையெல்லாம் சேரவே பூண்டசக்தி [340]

நாகமென்ற பாம்பையெல்லாம் நலமாகப் பூண்டசக்தி
அரவமென்ற பாம்பையெல்லாம் அழகாகப் பூண்டசக்தி
ஆபரணமாய்ப் பூண்டாய் அழகுள்ள பாம்பையெல்லாம்
நாகங் குடைபிடிக்க நல்லபாம்பு தாலாட்ட
தாராள மாய்ப்பூண்டாய் தங்கத்திரு மேனியெல்லாம்
பாலாட்ட தாலாட்ட தாயார் மனமிரங்கி
சேஷன் குடைகவிய செந்நாகம் வட்டமிட
வட்டமிட்டு வீற்றிருந்தாய் மாரிகண்ண னூராளே
மார்மேலே நாகமம்மா மடிமேல் புரண்டாட
மார்மேலுந் தோள்மேலும் வண்ண மடிமேலும் [350]

கொஞ்சிவிளை யாடுதம்மா கோபாலன் தங்கையரே
ஏழையா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க
குழந்தையா லாகுமோதான் கொம்பனையேத் தோத்தரிக்க
அடியேனா லாகுமோதான் ஆத்தாளைத் தோத்தரிக்க
எந்தனா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க
இல்லையென் பார்பங்கில் ஈஸ்வரியே மாரிமுத்தே
நில்லா யரை நாழி நிஷ்டூரத் தாண்டவியே
உண்டென் பார்பங்கில் ஒளிவிளக்காய் நின்றசக்தி
பார்த்தோர்க்குச் செல்வனம்மா பாலன் குழந்தையம்மா
உன்னைப் பகைத்தோர்க்கு உருமார்பி லாணியம்மா [360]

நினைத்தோர்க்கு தெய்வமம்மா எதிர்த்தார்க்கு மார்பிலாணி
தாயே நீ வாருமம்மா தற்பறையாய் நின்றசக்தி
வாக்கிட்டால் தப்பாது வரங்கொடுத்தால் பொய்யாது
பொய்யாது பொய்யாது பூமலர்தான் பொய்யாது
பூவிரண்டு பூத்தாலும் நாவிரண்டு பூக்காது
மறவரிட வாசலிலே மல்லிகைப்பூ பூத்தாலும்
மறவ ரறிவாரோ மல்லிகைப்பூ வாசனையை
குறவரிட வாசலிலே குடமல்லி பூத்தாலும்
குறவ ரரிவாரோ குடமல்லி வாசனையை
பன்றி முதுகினில் பன்னீரைப் பூசினாக்கால் [370]

பன்றி யறியுமோதான் பன்னீரின் வாசனையை
எந்தனா லாகுமோதான் ஈஸ்வரியைத் தோத்தரிக்க
மைந்தனா லாகுமோதான் மாதாவை நமஸ்கரிக்க
பாலனா லாகுமோதான் பார்வதியை நமஸ்கரிக்க
எச்சி லொருகோடி இளந்தீட்டு முக்கோடி
தீட்டு மொருகோடி தெருவெங்குந் தானுண்டு
கன்னிகள் தீட்டுக் கலந்தோடி வந்தாலும்
ஆறுதப்பு நூறுபிழை அடியார்கள் செய்தாலும்
தாயே மனம்பொறுத்து தயவாகக் கருமம்மா
எச்சிற் கலந்ததென்று இடையப்போய் நின்றாலும்[380]

தீட்டுக் கலந்தாலும் ஈஸ்வரியே மனம்பொறுத்து
பக்ஷம்வைத்துக் காருமம்மா பராபரியே ஈஸ்வரியே
விருப்பம்வைத்துக் காருமம்மா விருது படைத்தசக்தி
நீலிகபாலியம்மா நிறைந்த பஞ்சாட்சரியே
சூலி கபாலியம்மா சுந்தரியே மாரிமுத்தே
நிஷ்டூரக் காரியரே விஸ்தார முள்ளசக்தி
வேப்பிலையால் தான் தடவி விசிறிமுத் தழுத்திவிடு
ஆனபரா சத்தியரே அம்மைமுத் தழுத்திவிடு
இறக்கிறங்குந் தாயே ஈஸ்வரியே நான்பிழைக்க
படவேட் டமர்ந்தவளே பாங்கான மாரிமுத்தே [390]

ஊத்துக்காட் டமர்ந்தவளே உதிரபலி கொண்டவளே
வீராணம் பட்டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே
சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்
கன்னபுரத் தெல்லையெல்லம் காவல்கொண்ட மாரியரே
எக்கால தேவியரே ஈஸ்வரியே யிறங்குமம்மா
திக்கெல்லாம் பேர்படைத்த தேசத்து மாரியரே
அண்ட புவனமெல்லாந் துண்டரீக முள்ளசக்தி
கச்சிப் பதியாளே காமாட்சித் தாயாரே
கைலாச லோகமெல்லாம் காவல்கட்டி யாண்டவளே
பாதாள லோகமெல்லாம் பரதவிக்கப் பண்ணசக்தி [400]

காலைக் கொலுவிலம்மா காத்திருந்தா ராயிரம்பேர்
உச்சிக் கொலுவிலம்மா உகந்திருந்தா ராயிரம்பேர்
அந்திக் கொலுவிலம்மா அமர்ந்திருந்தா ராயிரம்பேர்
கட்டியக் காரரெல்லாம் கலந்தெச்சரிக்கை பண்ண
பாடும் புலவரெல்லாம் பண்பிசைந்த பாடல்சொல்ல
வடுகர் துலுக்கரோடு மராட்டியர் கன்னடியர்
கன்னடியர் காவலுடன் கர்னாட்டுப் பட்டாணியர்
இட்டசட்டை வாங்காத இடும்பரெல்லாம் காத்திருக்க
போட்டசட்டை வாங்காத பொந்திலியர் காத்திருக்க
வடுகர் துலுக்கரம்மா மறுதேசப் பட்டாணியர் [410]

வேடிக்கை பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும்
கேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து
மாயமெல்லா முன்மாயம் மருளரெல்லா முன்மருளர்
மருளர் தழைக்கவம்மா மருமக்க ளீடேற
பலிச்சட்டி தானெடுக்கும் புத்திரர்கள் தான்றழைக்க
வேதங்கள் தான்றழைக்க விண்ணவர்க ளீடேற
குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே கண்பாரும்
மைந்தர்கள் தான்றழைக்க மாதாவே கண்பாரும்
காஞ்சிபுரியிலே தான் கர்த்தரையும் நீ நினைத்து
கர்த்தரையும் நீ நினைத்துக் காமாட்சி பூஜைபண்ணாய் [420]

கங்கை முழுகியம்மா கிளிமொழியே தவமிருந்தாய்
வைகை மூழ்கியம்மா வனமயிலே தவமிருந்தாய்
தவத்தில் மிகுந்தவளே சத்தகன்னி தாயாரே
ஆற்று மணலெடுத்து அரனாரை யுண்டுபண்ணாய்
சேற்று மணலெடுத்துச் சிவனாரை யுண்டுபண்ணாய்
கம்பை நதியிலே காமாட்சி தவமிருந்தாய்
இருநூற்றுக் காதவழி திருநீற்றால் கோட்டையிட்டாய்
திருநீற்றால் கோட்டையிட்டாய் திகம்பரியே மாரிமுத்தே
அருணா சலந்தனிலே ஈசான்ய மூலையிலே
திருவண்ணா மலையிலேதான் தேவிதவமிருந்தாய் [430]

அருணா சலந்தனிலே ஆத்தாள் தவமிருந்தாய்
ஈசான்ய மூலையிலே இருந்தாய் பெருந் தபசு
இருந்தாய் பெருந் தபசு இடப்பாகம் பேறு பெற்றாய்
இடப்பாகம் பேறுபெற்றாய் ஈஸ்வரியே மாதாவே
காக முதுகினில் கதம்பப்பொடி பூசிவைத்தால்
காக மறியுமோதான் கதம்பப்பொடி வாசனையை
கொக்கு முதுகினிற் கோமேதகங் கட்டிவைத்தால்
கொக்கு மறியுமோதான் கோமேதகத்தி னொளியை
மூலக் கனலின் முதன்மையாய் நின்ற சக்தி
பாலனுக்கு வந்த பார எரிச்சல்களில் [440]

காலெரிவு கையெரிவு கட்டழகி வாங்குமம்மா
குத்தல் குடைச்சல் குலைமாரிடி நோவு
மண்டை குடைச்சலோடு மாரடைப்பு தலைநோவு
வாத பித்த சீதசுரம் வல்பிணியைக் காருமம்மா
இடுப்புக் குடைச்சலைத்தான் ஈஸ்வரியே வாங்குமம்மா
பித்த யெரிவுகளைப் பெற்றவளே வாங்குமம்மா
கழுத்து வலியதனைக் கட்டழகி வாங்குமம்மா
பத்திரியால் தான்தடவி பாரமுத் தழித்துவிடு
விபூதியைப் போட்டு இறக்கிவிடு முத்திரையை
வேப்பிலை பட்டவிடம் வினைகள் பறந்தோடுமம்மா [450]

பத்திரி பட்டவிடம் பாவம் பறந்தோடுமம்மா
விபூதிபட்ட தக்ஷணமே வினைகள் பறந்தோடுமம்மா
பஞ்சா க்ஷரம்பட்டால் பாவங்கள் தீர்ந்துவிடும்
பத்தென்றா லிரண்டறியேன் பாலனம்மா வுன்னடிமை
எட்டென்றா லிரண்டறியேன் ஏழையம்மா வுன்னடிமை
நாகத்தின் கண்ணேயம்மா நல்லவிடப் பாம்பே
சேஷத்தின் கண்ணேயம்மா சின்னவிடப் பாம்பே
பாம்பே தலைக்கணைதான் வேப்பிலையோ பஞ்சுமெத்தை
வேப்பம்பாலுண்டவளே வேதாந்த மாரிமுத்தே
ஐந்நூறு பாம்புனக்கு அள்ளியிட்ட வீரசடை [460]

வீரசடை மேலிருந்து விமலியரே கொஞ்சுமம்மா
முந்நூறு சந்தி முதற் சந்தி யுன்னுதென்றாய்
நானூறு சந்தி நடுச்சந்தி யுன்னுதென்றாய்
சந்திக்குச் சந்தி தனிச்சந்தி யுன்னுதென்றாய்
வீதிக்கு வீதி வெளிச்சந்தி யுன்னுதென்றாய்
பட்டத் தழகியம்மா படைமுகத்து ராஜகன்னி
கன்ன புரத்தாளே காரண சவுந்தரியே
திருவிளக்கு நாயகியே தேவிகன்ன னூராளே
மணிவிளக்கின் மேலிருந்து மாதாவே கொஞ்சுமம்மா
விளக்கிற் குடியிருந்து மெல்லியரே கொஞ்சுமம்மா [470]

திருவிளக்கின் மேலிருந்து தேவியரே கொஞ்சுமம்மா
கொஞ்சுமம்மா பெற்றவளே கோபாலன் தங்கையரே
சிரித்தார் முகத்தையம்மா செல்லரிக்கக் கண்டிடுவாய்
பரிகாசஞ் செய்பவரைப் பல்லைப் பிடுங்கி வைப்பாய்
மூலைவீட்டுப் பெண்களைத்தான் முற்றத்தி லாட்டிடுவாய்
அரண்மனைப் பெண்களைத்தா னம்பலத்தி லாட்டிடுவாய்
பொல்லாத பெண்களைத்தான் தோற்பாதங் கட்டிடுவாய்
தோற்பாதங் கட்டிடுவாய் துரந்தரியே மாதாவே
நடுவீதியிற் கொள்ளிவைத்து நானறியேன் என்றிடுவாய்
கடைவீதியிற் கொள்ளிவைத்துக் கடக்கப் போய் நின்றிடுவாய். [480]

கடியா விஷம் போலே கடிக்க விட்டுப் பார்த்திருப்பாய்
தீண்டா விஷம் போலே தீண்ட விட்டுப் பார்த்திருப்பாய்
பாம்புகன்னி நீலியம்மா பழிகாரி மாரிமுத்தே
தாயே துரந்தரியே சர்வலோக மாதாவே
ஆறாத கோபமெல்லாம் ஆச்சியரே விட்டுவிடு
கடலில் மூழ்கியம்மா கடுகநீ வாருமம்மா
காவேரியில் தான்மூழ்கி காமாக்ஷி வாருமிங்கே
வந்தமனை வாழுமம்மா இருந்தமனை ஈடேறும்
கஞ்சா வெறியன் கனவெறியன் பாவாடை
பாவாடை ராயனைத்தான் பத்தினியே தானழையும் [490]

தாயாரும் பிள்ளையுமாய்த் தற்காக்க வேணுமம்மா
மாதாவும் பிள்ளையுமாய் மனது வைத்துக் காருமம்மா
ஆத்தாளும் பிள்ளையுமாய் அன்பு வைத்துக் காருமம்மா
காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்
காசிவள நாட்டைவிட்டு காரணியே வந்தமரும்
ஊசிவள நாட்டைவிட்டு உத்தமியே வந்தமரும்
பம்பை முழங்கிவர பறைமேள மார்ப்பரிக்க
சிற்றுடுக்கை கொஞ்சிவர சிறுமணிக ளோலமிட
வேடிக்கைப் பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும்
கேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து [500]

சமய புரத்தாளே சாம்பிராணி வாசகியே
முக்கோணத் துள்ளிருக்கும் முதன்மையாய் நின்ற சத்தி
நாற்கோணத் துள்ளிருக்கும் நல்லமுத்து மாரியரே
பஞ்சா க்ஷரப்பொருளே பார்வதியே பெற்றவளே
அறுகோணத் துள்ளிருக்கும் ஆதிபர மேஸ்வரியே
அஷ்டா க்ஷரப்பொருளே ஆனந்த மாரிமுத்தே
நாயகியே மாரிமுத்தே நாரணனார் தங்கையரே
ஐம்பத்தோ ரட்சகியே ஆதிசிவன் தேவியரே
ஆதிசிவன் தேவியரே அம்மைமுத்து மாரியரே
பேருலக ரக்ஷகியே பெருமா ளுடன்பிறப்பே [510]

பெருமாளுடன் பிறந்து பேருலகை யாண்டவளே
ஆயனுடன் பிறந்து அம்மைமுத்தாய் நின்றவளே
திருகோணத் துள்ளிருக்கும் திரிபுர சவுந்தரியே
ஆறாதா ரப்பொருளே அபிஷேகப் பத்தினியே
மூலாதா ரப்பொருளே முன் பிறந்த தேவதையே
தாயே துரந்தரியே சர்வலோ கேஸ்வரியே
பத்திரியால் தான்தடவி பாரமுத்தைத் தானிறக்கும்
வேப்பிலையால் தான்தடவி மெல்லியரே தானிறக்கும்
மேனியெல்லாந் தானிறக்க மெல்லியரே தானிறக்கும்
இறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா [520]

முத்திலு முத்து முகத்திலிடு மாணிமுத்து
எங்கும் நிறைந்த எல்லார்க்கும் மாரிமுத்து
பெண்ணாய்ப் பிறந்து பேருலகை யாளவந்தாய்
பேருலகை யாளவந்தாய் பெண்ணரசி மாரிமுத்தே
நித்தம் பராமரிக்க நிஷ்ட்டூரி நீ பிறந்தாய்
தேசம் பராமரிக்க தெய்வகன்னி நீ பிறந்தாய்
கிளியேந்தும் நாயகியே கிளிமொழியே தாயாரே
நித்தியக் கல்யாணி நீலி பரஞ்சோதி
அம்மணியே பார்வதியே ஆணிமுத்துத் தாயாரே
லோகமெல்லாம் முத்தளக்கும் லோகபர மேஸ்வரியே [530]

வெற்றிக்கொடி பறக்க விருதுபம்பை தான்முழங்க
எக்காள மூதிவர எங்கும் கிடுகிடென்ன
பஞ்சவர்ண டால்விருது பக்கமெல்லாம் சூழ்ந்துவர
நாதசுர மேளம் நாட்டியங்க ளாடிவர
தப்பட்டை மேளம் தவில்முரசு தான்முழங்க
தாளங்கள் ஊதிவர கவிவாணர் எச்சரிக்க
சின்னங்கள் ஊதிவர சிறப்பாய்க் கொடிபிடிக்க
ஜண்டா சிலர்பிடிக்க தனிமுரசு தானடிக்க
கொடிகள் சிலர்பிடிக்க கொக்கரிப்பார் வீரமக்கள்
சாமரைகள் தான்வீசி சந்திப்பார் வீரமக்கள் [540]

தாரை பூரி சின்னம் ஆரவர மாய்முழங்க
தக்க வுடுக்கைகளும் தவிலோடு பம்பைகளும்
மிக்க கவுண்டைகளும் மிருதங்கந் தான்முழங்க
நன்மகுடி யுஞ்சுதியும் நன்றாக ஊதிவர
தம்புரு வீணை தக்கபடி தான் வாசிக்க
பம்பை யடித்துப் பறமேளந் தானதிர
கெண்செட்டு வாத்தியமும் கிளர்நெட்டு வாத்தியமும்
கொடுவாத்தி யம்புதிதாய் கொண்டுவந்தர் உன்மக்கள்
இத்தனை வாத்தியங்கள் இசைக்கின்றார் பாருமம்மா [550]

பார்த்துக் குளிருமம்மா பாங்கான உன்மனது
கண்டு குளிருமம்மா கல்லான உன்மனது
எப்படி யாகிலுந்தான் ஏழைகளுமீ டேற
கண்பாரும் பாருமம்மா காரண சவுந்தரியே
இந்திரனுக் கொப்பா யிலங்குமக மாரியரே
கும்பத் தழகியம்மா கொலுமுகத்து ராஜகன்னி
சகலகுற்றம் சகலபிழை தாயாரே நீ பொறுப்பாய்
வணங்குகிற மக்களுக்கு வாழ்வு மிக அளிப்பாய்
ஓங்கார ரூபியென்று உன்னையே தோத்தரிக்க
படவேட்டில் வீற்றிருக்கும் பரஞ்சோதி தாயாரே [560]

ஆரறிவா ருன்மகிமை ஆணிமுத்து தாயாரே
அண்ட புவனமெல்லாம் அம்மா வுனைத் தொழுவார்
தேசங்க ளெங்கும் தேவியைத் தோத்தரிப்பார்
எள்ளுக்கு ளெண்ணெய்போ லெங்கும் நிறைந்தசக்தி
எங்கும் நிறைந்தவளே எல்லார்க்குந் தாயாரே
அஞ்சேலென்ற அஸ்தமொடு அடியார் தமைக்காக்க
வேப்பிலை யுங்கையில் விபூதியெங்குந் தூளிதமும்
கருணாகடாக்ஷம்வைத்து காக்கு மகமாயிவுந்தன்
சரணார விந்தமதைத் தந்தருளு மாரிமுத்தே
உன்பேர் நினைத்தால் பில்லிபிசாசு பறந்தோடுமம்மா [570]

சூனியமும் வைப்பும் சுழன்றலைந் தோடிவிடும்
பாதாள வஞ்சனமும் பறந்துவிடும் உன்பேர்நினைத்தால்
சத்தகன்னி மாதாவே சங்கரியே மனோன்மணியே
கரகத்தில் வீற்றிருக்கும் கன்னனூர் மாரிமுத்தே
சூலங் கபாலமுடன் துய்ய டமருகமும்
ஓங்கார ரூபமம்மா ஒருவ ரறிவாரோ
மகிமை யறிவாரோ மானிடர்கள் யாவருந்தான்
அடியார் தமைக்காக்கும் மந்திர நிரந்தரியே
அடியார்கள் செய்தபிழை ஆச்சியரே நீ பொறுப்பாய்
கோயி லடிமையம்மா கொண்டாடும் பாலகண்டி [580]

சன்னதி பிள்ளையைத்தான் தற்காரும் பெற்றவளே
உன்னையல்லால் வேறுதுணை ஒருவரையுங் காணேனம்மா
வருந்துவார் பங்கில் வளமாய்க் குடியிருப்பாய்
பாவாடைக் காரியம்மா பராபரியே அங்குகண்ணே
உண்ணுகின்ற தேவதைகள் உடுத்துகின்ற தேவதைகள்
கட்டுப்பட்ட தேவதைகள் கார்க்கின்ற தேவதைகள்
இந்த மனையிடத்தி லிருந்துண்ணும் தேவதைகள்
சாம்பிராணி தூபத்திற் குட்பட்ட தேவதைகள்
அனைவோரும் வந்திருந்து அடியாரைக் காக்கவேணும் [589]

ஓராம் படித்தளமாம் ஓலைப்பூ மண்டபமாம்
ஓலைப்பூ மண்டபத்தில் உகந்து கொலுவிருந்தாள்
இரண்டாம் படித்தளமாம் இரத்தின சிம் மாதனமாம்
இரத்தின சிம்மாதனத்தி லிருந்தரசு தான்புரிவாள்
மூன்றாம் படித்தளமாம் முனைமுகப்புச் சாலைகளாம்
முனைமுகப்புச் சாலைகளில் முந்திக் கொலுவிருந்தாள்
நான்காம் படித்தளமாம் நவரத்ன மண்டபமாம்
நவரத்தின மண்டபத்தில் நாயகியும் வந்தமர்ந்தாள்
ஐந்தாம் படித்தளமாம் அழுந்தியசிம் மாதனமாம்
அழுந்திய சிம்மாதனத்தில் ஆயி கொலுவிருந்தாள்
ஆறாம் படித்தளமாம் அலங்காரச் சாவடியாம் [600]

அலங்காரச் சாவடியில் ஆய்ச்சியரும் வந்திருந்தாள்
ஏழாம் படித்தளமாம் எழுதிய சிம் மாதனமாம்
எழுதிய சிம்மாதனத்தி லீஸ்வரியாள் கொலுவிருந்தாள்
எட்டாம் படித்தளமாம் விஸ்தார மேடைகளாம்
விஸ்தார மேடைகளில் விமலியரும் வந்தமர்ந்தாள்
ஒன்பதாம் படித்தளமாம் ஒருமுகமாய் நின்றசக்தி
ஒருமுகமாய் நின்றசக்தி உத்தமியுங் கொலுவிருந்தாள்
பத்தாம் படித்தளமாம் பளிங்குமா மண்டபமாம்
பளிங்குமா மண்டபத்தில் பத்திரியாள் கொலுவிருந்தாள்
ஆத்தாள் கொலுவிலேதான் ஆரார் கொலுவிருந்தார் [610]

ஐங்கரனும் வல்லபையும் அன்பாய்க் கொலுவிருந்தார்
தொந்தி வயிற்றோனும் துந்துபியுங் கொலுவிருந்தார்
குழந்தை வடிவேலன் குமரேசர் தானிருந்தார்
தோகை மயிலேறும் சுப்பிரமணியர் கொலுவிருந்தார்
சிங்கவா கனமேறும் தேவி கொலுவிருந்தார்
ஊர்காக்கும் காளி உத்தமியாள் கொலுவிருந்தாள்
துர்க்கையொடு காளி தொடர்ந்து கொலுவிருந்தாள்
வள்ளிதெய் வானையுடன் மகிழ்ந்து கொலுவிருந்தாள்
பச்சைமலை நாயகியாள் பைங்கிளியாள் தானிருந்தாள்
பூவைக் குறத்தியரும் பொருந்திக் கொலுவிருந்தாள் [620]

வாழ்முனியும் செம்முனியும் வந்து கொலுவிருந்தார்
காத்தன் கருப்பனொடு கட்டழகர் வீற்றிருந்தார்
தொட்டியத்துச் சின்னானும் துரைமகனுந் தானிருந்தார்
மருமக்க ளெல்லோரும் கூடிக் கொலுவிருந்தார்
குமாரர்க ளெல்லோரும் மகிழ்ந்து கொலுவிருந்தார்
ஆரிய மாலையுட னனைவோரும் வீற்றிருந்தார்
ஆயன் பெருமா ளனந்த சயனென்னும்
மாயன் பெருமாள் மங்கை மணவாளன்
ஐவரைக் காத்த ஆதி நெடுமாலும்
பஞ்சவரைக் காத்த பாரளந்தோர் தாமிருந்தோர் [630]

கொற்றவரைக் காத்த கோபாலர் தாமிருந்தார்
முட்டையிற் குஞ்சு முகமறியா பாலகரை
பிட்டு வளர்த்தெடுத்த பெருமாள் கொலுவிருந்தார்
செட்டையிற் காத்த செயராமர் சீதையரும்
அலமேலு மங்கையம்மா ளரிராமர் சீதையரும்
மங்கையோடு லட்சுமியும் மகிழ்ந்து கொலுவிருந்தார்
சீதேவி மூதேவி சேர்ந்துக் கொலுவிருந்தார்
பாஞ்சால னெக்கியத்தில் பதுமைபோல் வந்துதித்த
பத்தினியாள் துரோபதையும் பாரக் கொலுவிருந்தார்
தளரா தனஞ்செயரும் தருமர் கொலுவிருந்தார் [640]

தேவேந்திரன் புத்திரனார் தேர்விஜயன் தாமிருந்தார்
நகுல சகாதேவர் நலமாய்க் கொலுவிருந்தார்
கானக் குயிலழகர் கட்டழகர் வீற்றிருந்தார்
ஐவர்களுங் கூடி அன்பாய்க் கொலுவிருந்தார்
பட்டத் தரசி பைங்கிளி சுபத்திரையும்
ஆயன் சகோதரியா ளாரணங்கு வீற்றிருந்தாள்
நல்லதங்காள் வீரதங்காள் நல்லசங் கோதியம்மாள்
அந்தமுள்ள சுந்தரியா ளாரணங்கு வீற்றிருந்தாள்
மலையனூர் தானமர்ந்த மாரிக் கொலுவிருந்தாள்
கைச்சூலங் கப்பறையுங் கையிற் கபாலமுடன் [650]

பச்செலும்பு தின்றால் பாலொழுகுமென்று சொல்லி
சுட்டெலும்பு தின்றவளே சுடலைவனங் காத்தவளே
அக்காளுந் தங்கையரும் ஐந்திரண்டேழு பேரும்
ஐந்திரண்டேழு பேரும் அங்கே கொலுவிருந்தார்
தங்காது பேய்பில்லிதன் பேரைச் சொன்னவுடன்
அங்காள ஈஸ்வரியும் அமர்ந்து கொலுவிருந்தார்
தொல்வினை நீக்கிச் சுகுணமதை யளிக்கும்
எல்லைப் பிடாரியரும் இங்கே கொலுவிருந்தார்
காவலர்கள் தான்புகழக் கனகசிம் மாதனத்தில்
காவ லதிகாரி கட்டழகி வீற்றிருந்தாள் [660]

இந்தமனைமுதலா ஏழுமனை யுன்காவல்
சந்தத முன்காவல் சாதுகுண மாரியரே
காவல் கவனமம்மா கட்டழகி மாரிமுத்தே
காவலுக் குள்ளே களவுவரப் போகுதம்மா
பார சவுக்கிட்டுப் பத்திரமாய்க் காருமம்மா
தீரா வினைகளைத்தான் தீர்க்கும் பராபரியே
தாழும் பதிகளைத்தான் தற்காத்து ரட்சியம்மா
ஏழு பிடாரியும் இசைந்து கொலுவிருந்தார்
முத்தலு ராவுத்தன் முனையுள்ள சேவகரும்
முற்றத்தில் வந்து முனைந்து கொலுவிருந்தார் [670]

பூவாடை கங்கையென்று பூரித்துக் காத்திருக்கும்
பாவாடை ராயனும் பக்கங் கொலுவிருந்தார்
தாட்சியில்லா சிவசங்கரியா ளென்றுசொல்லும்
ஆச்சியுடன் கொலுவில் அமர்ந்து கொலுவிருந்தார்
தேவித் திருக்கொலுவில் சேர்ந்து கொலுவிருந்தார்
ஆயித் திருக்கொலுவில் அனைவரும் கொலுவிருந்தார்
மாரிக் கொலுவில் மனமகிழ்ச்சி யாயிருந்தார்
வீரியக் கொலுவில் வீற்றிருந்தா ரெல்லோரும்
ஆலித்துத் தானிருந்தார் அம்மைத் திருக்கொலுவில்
பாலித்துத் தானிருந்தார் பராபரியாள் தன் கொலுவில் [680]

கூடிக் கொலுவிருந்தார் கொம்பனையாள் தன் கொலுவில்
நாடிக் கொலுவிருந்தார் நாரணியாள் தன்கொலுவில்
சந்தேகம் போக்கிச் சாயுச் சியமடைய
சந்தோஷமாகத் தாமிருந்தா ரெல்லோரும் [684]

நாடு தழைக்கவம்மா நானிலத்தோர் தான்வாழி
மாடு தழைக்கவம்மா நல்லோர் மிகவாழி
பாரிலுள்ள ஆடவரும் பாலகரும் மங்கையரும்
ஆரியரும் மற்றோரும் யாவர்களும் தான்படிக்க
முன்னாளில் மூத்தோர் மொழிந்த இந்த தாலாட்டை
இன்னாளில் போற்ற எழுதா எழுத்ததனால் [690]

அச்சுக்கூடத் ததிபர் அநேகர் இதுவரையில்
உச்சிதமாய் அச்சிலிதை யோங்கிப் பதிப்பித்தார்
கற்றோரும் மற்றோருங் களிப்பாய்ப் படிப்பதற்கு
சொற்குற்றமில்லாமல் சுத்தப் பிரதியாய்
பாரிலுள்ளோ ரிக்கதையைப் படித்துத் தொழுதேற்ற
கற்றவரும் மற்றவரும் களிப்படைய வாழி
சங்கரனும் சங்கரியும் ஆறுமுகனுந்தான் வாழி
செங்கண்மால் ஸ்ரீராமர் சீதையரும் தான்வாழி
பஞ்சவர்க ளனைவரும் பைங்கிளியாள் துரோபதையும்
அல்லி சுபத்திரையும் அனைவோரும் தான் வாழி [700]

முப்பத்து முக்கோடி தேவர்க ளும்வாழி
சொற்பெரிய சோம சூரியாக் கினிவாழி
நாற்பத் தெண்ணாயிரம் நல்முனிவர் தான்வாழி
சந்திரனுஞ் சூரியனுந்தானவர்கள் தான்வாழி
இந்திரனுந் தேவர்கள் எல்லோருந் தான்வாழி
கற்பகக் காவும் காமதேனுவும் வாழி
பற்பல தீவும் பஞ்சாக்ஷரம் வாழி
காத்தனோடு வீரன் கருப்பன் மிகவாழி
சங்கிலிக் கருப்பன் சப்பாணி தான்வாழி
பாவாடை ராயன் பலதேவரும் வாழி [710]

இக்கதை கேட்டோர் என்னாளுந் தான்வாழி
பெருமையுடன் கேட்கும் பெரியோர் மிகவாழி
ஊரெங்கும் கீர்த்தி பெற்ற உத்தமருந் தான்வாழி
பாருலகி லிக்கதையைப் படித்தோர் மிகவாழி
நாயகியாள் தன்கதையை நாள்தோறும் வாசிப்போர்
பாரினில்புத் திரபாக்கியம் படைத்து மிகவாழ்வாரே
மாரித் திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்
தேவி திருக்கதையை தீர்க்கமய்க் கேட்டோரும்
பாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான்பெறுவார்
நாடித் துதிப்போரும் நற்கதியைத் தானடைவார் [720]

ஆல் போல்தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார். [722]

மங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு !
எங்கும் நிறைந்த ஈஸ்வரிக்கு மங்களமாம் ! !

மாரியம்மன் தாலாட்டு முற்றிற்று.

ஓம் சக்தி ஓம்

No comments:

Post a Comment