Friday, August 5, 2011

1.
வர வேண்டும் வர வேண்டும் தாயே – ஒரு வரம்
தர வேண்டும் தர வேண்டும் நீயே – அம்பா
(வர வேண்டும் )

அறம் வளர்க்கும் அம்பா பர்வத வர்தனி
ஐயாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி – திரு
வையாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி
(வர வேண்டும் )

தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே – இவ்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே
(வர வேண்டும் )



2.
ஆய்ந்தாய்ந்து பார்க்கின்ற அறிவெனக்கு வேண்டாம்!
ஞாலமெலாம் புகழ்கின்ற ஞானமும் வேண்டாம்!
ஆண்டாண்டு காலமாய் புவியாளும் தேவீ!
உன்மீது பித்தான அன்பொன்றே வேண்டும்!

உன்அன்பின் மதுவுண்டு நான்களிக்க வேண்டும்!
அம்மதுவின் போதையிலே எனைமறக்க வேண்டும்!
பக்தர்களின் இதயங்களைக் கொள்ளைகொள்ளும் காளீ!
உனதன்புக் கடலினிலே எனைமூழ்க வைநீ!

சுழல்கின்ற புவியோடு உணர்வுபல சுழலும்;
உலகெல்லாம் உன்னுடைய மாயைதனில் உழலும்!
சிரிப்போரும் அழுவோரும் மகிழ்வோரும் உண்டு;
சிறிதும்உன்னை நினையாது மரிப்போரும் உண்டு!

யேசுவும், மோசஸும், புத்தர், கௌரங்காவும்
உன்னன்பின் மதுவருந்தி போதையிலே திளைத்தார்;
நானும் அந்நிலையடைந்து அவரோடு களிக்கும்
நாளெந்த நாளோ? நீசொல்வாய் அம்மா!



3.
ஆற்று வெள்ளம், நாளை வரத்
தோற்றுதே குறி - அம்மா
கண்ணில் வெள்ளம், நித்தம் வரக்
குறி சொல்வாயோ?

தாயி என்று, கால் பிடித்துக்
கெஞ்சும் பிள்ளையை - இன்று
நோக வைத்து, நொங்க வைத்து
நடம் புரிவாயோ?
--------------------------------------

பிறந்த வீட்டில், பட்டாம் பூச்சி
போலப் பறந்தேன் - என்னைப்
பிடித்து வந்துன், பிள்ளை வீட்டில்
வளர்த்த ஈஸ்வரி...

குன்றில் உந்தன் பிள்ளை யவன்
கோவித்துக் கொண்டால் - மனம்
கொஞ்சமும் இரங்கான் இதைச்
சொல்ல வில்லையே!
--------------------------------------

மக மாயி உன்னை நம்பி வந்த
பெண்ணைப் பாரடி!
குக தாயி எந்தன் கண் துடைக்க
கை வரல்லையோ?

அரங்க நகர் அப்பன் அங்குச்
சோறு ஊட்டுவான் - இங்கே
இரங்க யாரும் எனக்கில்லை
அஞ்சொல் நாயகீ!
------------------------------------

ஆதி மூலம், என்றே அன்று
ஆனை பிளிற - அப்பா
ஓடி வந்தார், அங்குச் சொல்ல
மனம் வரல்லையே!

ஏது பிழை செய்திடினும்
எனக்கு இங்கே - அம்மா
பக்கத் துணை நீ ஒருத்தி
நீ ஒருத்தியே!
-------------------------------

ஆதி சக்தி வீட்டில் எந்தன்
நாதி கிடக்கும் - என்
மீதி உயிர் மீது அவன்
பார்வை பிறக்கும்!

கந்தன் மனக் கல் உருகும்
காலம் வரைக்கும் - உன்
தோளே கதி, தாளே கதி
தோகை மயிலே! - அம்மா....

தோளே கதி, தாளே கதி...
கற்பகாம்பிகே!!!



4.
நீ இரங்காய் எனில் புகல் ஏது? - அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறை திரு
(நீ இரங்காய் எனில்)

தாய் இரங்கா விடில், சேய் உயிர் வாழுமோ?
சகல உலகிற்கும் நீ, தாய் அல்லவோ அம்பா?
(நீ இரங்காய் எனில்)

பாற்கடலில் உதித்த திருமகளே - செள
பாக்ய லட்சுமி என்னைக் கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா
(நீ இரங்காய் எனில்)


5.
எழில்ராணி உன்பதங்கள் போற்றுகின்றேன்
தமிழ்ப் பாமாலை தினமுனக்கு சாற்றுகின்றேன்
உனக்கெனவே ஒருகோவில் அமைத்து வைத்தேன்
அதில் உடன்வந்து குடிபுகவே உனை அழைத்தேன்

கயிலாயம் உனக்கெதற்கு, குளிர் நடுக்கும் - உன்றன்
மலர்ப்பாதம் தரைதொட்டால் மனம் பதைக்கும்;
தாமரையில் நீநின்றால் கால் கடுக்கும் - நறு
மணமலர்நீ எனமயங்கி வண்டு கடிக்கும்!

வீணைமீட்டி மீட்டிப்பிஞ்சு விரல் வலிக்கும் - சிம்மம்
ஏறிவீணே சுற்றிவந்தால் களைப் பெடுக்கும்;
பூந்தளிரே புதுமலரே இனியேனும் நீயென் - உளக்
கோவில் வந்தமர்ந்தால் மனம் களிக்கும்!




No comments:

Post a Comment