Wednesday, July 14, 2010

இறைநாமத்தின் சக்தி


ஒரு பெண் அடியாள் தனது குருவுக்குத் தொண்டு செய்து வந்தாள். குரு எவ்வாறு சிரத்தையுடன் இறை நாமத்தை உச்சரிப்பாரோ அவ்வளவு பக்தியுடன் இப் பெண் அடியாளும் ஜெபித்துவந்தாள். பசுவின் சாணியைப் பிடித்து காயவைத்து விறகாகப் பாவிப்பதற்குத் தினமும் வேலை செய்வாள். இவ்வாறு செய்து வெயிலில் காய்வதற்காக ஒரு நாள் வைத்தாள்.

அயலில் உள்ள வேறு ஒரு பெண் இதே வண்ணம் சாணி தட்டி, அடியவளின் சாணி உருண்டைகளுக்கு அருகில் காய வைத்தாள். ஏதோ ஒருவிதமாக இருவரினதும் சாணி உருண்டைகளும் கலந்து விட்டன. அயலவள் தனக்குரிய சாணி உருண்டைகளோடு அடியவளின் சாணி உருண்டைகளிற் சிலவற்றை எடுக்க எத்தனித்தாள்.

இதனைக் கேள்வியுற்ற குருவானவர், " எனது அடியாள் உருட்டிய சாணி உருண்டைகளை மிக இலகுவாகக் கண்டுபிடிக்க முடியும் " என்று கூறிவிட்டு ஒவ்வொரு சாணி உருண்டைகளையும் எடுத்துத் தனது காதருகே வைத்தார். சிலவற்றில் இறைவனது நாமம் ஒலிப்பது கேட்டது. எதனிடம் இறை நாமம் ஒலிப்பது கேட்க முடியுமோ அவைகளை வேறாக்கினார். இவ்விதம் இரு பெண்களுக்குமிடையில் வந்த பிணக்கை நீக்கிவிட்டார்.

என்ன விந்தை; பெண் அடியாள் நின்றும், இருந்தும், கிடந்தும் எத்தொழிலைச் செய்தாலும் இறை நாமத்தை இடைவிடாது உச்சரித்த வண்ணமாகவே இருப்பதனால் அச்சொற்களைச் சாணியின் ஈரலிப்புத்தன்மை ஈர்த்தது. அது காரணமாக அச்சொற்கள் எதிரொலித்த வண்ணமிருந்தன.

இது போலத்தான் நாம் எத்தனை தடவை இறைவனது நாமத்தை உச்சரிக்கின்றோமோ அத்தனையும் நமக்கு நன்மையே. பின்னர் நீங்கள் உச்சரிக்காது இருக்கும் நேரத்தில் கூட மனதில் அதன் எதிரொலியை உங்களால் உணரமுடியும்.

ஆலயங்களில் அர்ச்சகர் மந்திரங்களை உச்சரித்து விக்கிரகத்திற்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்வார். அவ் விக்கிரகம் அம் மந்திரத்தினை ஈர்த்து, அதற்கான சக்தியையும் வெளிவிடும். இன்றும் சிறப்பாக, நியமத்தோடு பூஜை செய்யப்படும் விக்கிரகங்கள் மிகுந்த சக்தியோடு விளங்குவதைக் காணலாம்.


நன்றி : சுவாமி ராமதாஸ் அருளுரைகள்

No comments:

Post a Comment